Published : 06 Jan 2021 04:32 PM
Last Updated : 06 Jan 2021 04:32 PM
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை ஏற்பது போல், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கும் கட்டணத்தை ஏற்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாகப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் சிஎஸ்ஐஆர் நிதியின் கீழ் டாக்டர் அம்பேத்கர் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுசார் மையத்தின் திறப்பு விழாவுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை வகித்தார்.
இந்த மையத்தை இன்று திறந்து வைத்து முதல்வர் நாராயணசாமி பேசும்போது, ''புதுச்சேரியில் இதுபோன்று அறிவுசார் மையம் அமைக்க வேண்டும் என்பது விருப்பம். ஏற்கெனவே காமராஜர் மணிமண்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஐஏஎஸ் பயிற்சி மையம் உள்ளிட்டவற்றை இணைத்து அறிவுசார் மையமாகவும் மாற்றுவோம்.
சமீபத்தில் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இதுபோல வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளோம். இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT