Published : 06 Jan 2021 03:10 PM
Last Updated : 06 Jan 2021 03:10 PM
உள்நாட்டுப் பசுக்கள் குறித்து ஆன்லைனில் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறுவோருக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்க உள்ளதாக காமதேனு ஆயோக் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய காமதேனு ஆயோக்கின் தலைவர் வல்லபாய் கத்ரியா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''உள்நாட்டுப் பசுக்கள் குறித்து 'பசு அறிவியல்' என்ற பெயரில் ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தேர்வை எழுத எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
'காமதேனு கெள விக்யான் பிரச்சார் பிரசார்' என்ற பெயரில் தேசிய அளவில் தேர்வுகள் நடைபெறும். ஆரம்பப் பள்ளி மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நான்கு தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.
இளம் மாணவர்களிடமும் பிற குடிமக்களிடமும் உள்நாட்டுப் பசுக்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும் இருக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து அறியச் செய்யவும் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
தேர்வுக்கான பாடத்திட்டம் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் இணையதளத்தில் இருக்கும். தேர்வில் பங்கு பெறுவோர் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் உண்டு. வெற்றி பெறும் நபர்களுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும்'' என்று வல்லபாய் கத்ரியா தெரிவித்தார்.
கூடுதல் தகவல்களுக்கு: http://kamdhenu.gov.in/
2019-ல் உருவாக்கப்பட்ட தேசிய காமதேனு ஆயோக் அமைப்பு, பசுக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. மத்திய மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT