Published : 05 Jan 2021 05:18 PM
Last Updated : 05 Jan 2021 05:18 PM
ஏப்ரல் மாதம், புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று நாடு முழுவதும் 69% பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்து நாடு முழுவதும் பிரபல ஆன்லைன் தளமான 'லோக்கல் சர்க்கிள்ஸ்' ஆய்வு மேற்கொண்டது. இதில் 19 ஆயிரம் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அந்த ஆய்வு முடிவுகளில், கரோனா தடுப்பூசிகள் சந்தைக்கு வந்தாலும் ஏப்ரல் மாதத்தில் அல்லது பள்ளிகள் திறப்புக்கு முன்னர், தடுப்பூசிகளைத் தங்களின் குழந்தைகளுக்குச் செலுத்த 26 சதவீதப் பெற்றோர் மட்டுமே முன்வந்துள்ளனர்.
அதேபோல 56 சதவீதம் பேர் 3 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாகவே காத்திருப்பதாகவும், தடுப்பூசி குறித்த தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளைத் தங்களின் குழந்தைகளுக்குச் செலுத்தலாம் என்று கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் 69 சதவீதப் பெற்றோர், கோவிட் சூழல் மற்றும் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதம் புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் உருமாறிய கரோனா வைரஸ் உள்ளிட்ட அச்சுறுத்தல்களால் தங்களின் குழந்தைகளைத் தற்போது பள்ளிக்கு அனுப்ப அச்சம் தெரிவித்துள்ளனர். எனினும் 23 சதவீதம் பேர் ஜனவரி மாதத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட்டால்தான் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மார்ச் மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, பள்ளிகள் மூடப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அக்டோபர் 15 முதல் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.
ஜனவரி மாதம் முதல், பிஹார், அசாம், கேரளா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT