Published : 05 Jan 2021 02:26 PM
Last Updated : 05 Jan 2021 02:26 PM
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்காகத் தயார் செய்யப்பட்ட வகுப்பறைகளைப் பார்வையிட்டு, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு 10 மற்றும்12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது பற்றி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. இந்தக் கூட்டம் 8-ம் தேதி வரை நடைபெறும். நாளை முதல் அனைத்துப் பள்ளிகளிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க உள்ளது.
அதில் பெற்றோர்கள் முன்வைக்கும் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப அரசு உரிய முடிவெடுக்கும்'' என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் ஜன.8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இதுகுறித்த அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் ஏகமனதாக தெரிவிக்கும் கருத்துகளைத் தொகுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள், பெற்றோரிடம் கையொப்பம் பெற்று, அந்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அதைப் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.
இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT