Published : 04 Jan 2021 08:30 PM
Last Updated : 04 Jan 2021 08:30 PM
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இன்று (ஜன.4) பொங்கல் பரிசு வாங்கச் சென்ற மூதாட்டியை இழுவை வண்டியில் ஏற்றி சிறுவர்கள் அழைத்துச் சென்றனர்.
கொத்தமங்கலம் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (70). தனியாக வசித்து வரும் இவருக்கு அவ்வப்போது மகள் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ.2,500 வாங்குவதற்காக வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு இன்று நடந்து சென்றார். நீண்ட நேரம் நடந்ததில் சோர்வடைந்த மூதாட்டி, இடையில் சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் படுத்துவிட்டார்.
இதையறிந்த, அப்பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன்களான நிதின்(9), நிதிஷ்(9) ஆகியோர் தங்களது வீட்டில் உள்ள இரு சக்கர வாகனத்தில் பொருத்தி இழுத்துச் செல்லப் பயன்படுத்தும் இழுவை வண்டியில் சுப்புலட்சுமியை ஏற்றிப் படுக்கச் செய்து ரேஷன் கடைக்கு வண்டியை இழுத்துச் சென்றனர். இதேபோன்று பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பியவரை, மீண்டும் அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று இறக்கி விட்டனர்.
தக்க சமயத்தில் உதவிய சிறுவர்களுக்கு, மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும், சிறுவர்களின் செயலை ரேஷன் கடையில் கூடியிருந்த பெண்களும் பாராட்டினர்.
தேர்தல் சமயங்களில் வயதானவர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் கட்சியினர், இதுபோன்ற சமயங்களில் கண்டும் காணாமலும் இருப்பதாக அப்பகுதிப் பெண்கள் கவலையோடு கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT