Last Updated : 04 Jan, 2021 02:50 PM

1  

Published : 04 Jan 2021 02:50 PM
Last Updated : 04 Jan 2021 02:50 PM

காரைக்காலில் பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்

கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பள்ளி ஆசிரியை.

காரைக்கால்

காரைக்காலில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, உற்சாகத்துடன் வந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

புதுச்சேரியில் பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், ஜன.4-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. கரோனா பரவல் சூழல் இருப்பதால், பள்ளிகள் திறப்பு முடிவை அரசு கைவிட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. எனினும் திட்டமிட்டபடி இன்று (ஜன.4) பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். எனினும் முழுமையான அளவில் மாணவர்களின் வருகை இல்லை. உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக்கவசம் அணிந்து, கைகளைச் சுத்தம் செய்த பின்னர் மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு, பாடம் நடத்தப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் பெற்றோர்களின் அனுமதிக் கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டது. வருகைப் பதிவேடு எடுக்கப்பட்டாலும் அது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி, மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ள மாணவர்கள்

இதற்கிடையே அம்பகரத்தூர் அரசு தொடக்கப்பள்ளி, திருநள்ளாறு அரசு நடுநிலைப் பள்ளி, காரைக்கால் தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு, புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் நேரில் சென்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை குறித்தும் ஆய்வு செய்தார். மாணவர்களிடம் கலந்துரையாடி கருத்துகளைக் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.அல்லி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் ஏ.அல்லி கூறும்போது, ''மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் முழுமையாக வந்திருந்தனர். 60 முதல் 70 சதவீதம் வரை மாணவர்களின் வருகை இருந்தது. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்ததை நேரடியாக அறிய முடிந்தது. பெற்றோர்களும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளனர்.

தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் வரை அமர வைக்கப்படுகின்றனர். இடப்பற்றாக்குறை உள்ள சில பள்ளிகளில் மட்டும், ஒரு வகுப்புக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் வகையில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும் நிலையில், இடைவேளை கிடையாது. தேவை உள்ள மாணவர்களுக்கு அனுமதியளிக்கப்படும். மாணவர்கள் சென்று வந்தவுடன் கழிப்பறைகள் உடனுக்குடன் சுத்தம் செய்யப்படும். கரோனா பரவல் தடுப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்துப் பள்ளிகளிலும் பின்பற்றப்படுகின்றன'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x