Published : 02 Jan 2021 01:13 PM
Last Updated : 02 Jan 2021 01:13 PM
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை (ஜனவரி 3 ஆம் தேதி) குரூப் 1 தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு எழுதுபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 66 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள். துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளுக்குத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், , தேர்வு எழுதுபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
* தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு, தேர்வு தொடங்கப்படும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.
* விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை கொண்ட பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* விடைத்தாளில் உரிய இரு இடங்களில் கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். அப்போது பிற இடங்களில் மை படாமலும், விடைத்தாள் சேதமடையாமல் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.
* வினாத்தாள் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் (E) என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.
* விடைத்தாளில் (A), (B), (C), (D) மற்றும் (E) என ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி, மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பிக் கருமையாக்க வேண்டும். தவறினால் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்தச் செயலை மேற்கொள்ளத் தேர்வு முடிந்த பிறகு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகளும் நேராமல் இருப்பதற்காகவும் தேர்வாணையம் மேற்குறிப்பிட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT