Published : 31 Dec 2020 06:39 PM
Last Updated : 31 Dec 2020 06:39 PM
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 10 ஆம் தேதி முடிவடையும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கப் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் வரை சிபிஎஸ்இ குறைத்தது. இதற்கிடையே, 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என்றும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ கடந்த மாதம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களும், ஆசிரியர்களும் ட்விட்டர் மூலம் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்தார். அதன்படி, அவர்களின் கருத்துகள் குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை இன்று (டிச.31) மாலை 6 மணிக்கு வெபினார் நிகழ்ச்சியில் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
அதன்படி, 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 10ஆம் தேதி முடிவடைகின்றன. செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றன. தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும், ஜூலை 15ஆம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெபினாரில் தெரிவித்தார்.
இந்த நேரலை நிகழ்ச்சி அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.
தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், அட்டவணை உள்ளிட்ட அனைத்தும் https://cbse.nic.in/ என்ற சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT