Published : 31 Dec 2020 06:36 PM
Last Updated : 31 Dec 2020 06:36 PM
தேசிய திறனாய்வுத் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் மாற்றம் இருந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்சிஇஆர்டி நடத்தும் இந்தத் தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாகத் தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும்.
2020- 2021ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், டிசம்பர் மாதம் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நடைபெற்றது. இந்நிலையில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தேசிய திறனாய்வுத் தேர்வு, டிசம்பர் 27ஆம் தேதி அன்று நடைபெற்று முடிந்தது. தேர்வுக்கான உத்தேச விடைகள் (Tentative Key Answer) அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடைகள் சார்பாக மாற்றம்/ கருத்துகள் இருப்பின் அவற்றை 08.01.2021-க்குள் ntsexam2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT