Published : 31 Dec 2020 12:36 PM
Last Updated : 31 Dec 2020 12:36 PM
சிறுபான்மை பள்ளிக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தில், ஒரே வங்கிக் கணக்கில் பல விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்ததை அடுத்தது, இதுகுறித்து ஆய்வு செய்யத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையினப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இதற்காகத் தகுதியான மாணவர்களின் விவரங்களை அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அரசின் உதவித்தொகைக்காக இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காகப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத் தனித்தனியாகப் பயனர் எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களைத் தனியார் இணையதள மையங்களுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சில தனியார் மையங்கள் ஒரே வங்கிக் கணக்கு எண்ணில், பல மாணவர்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளதாகப் புகார் வந்துள்ளது.
இதனையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தொகைக்காக விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை மறு ஆய்வு செய்து, விவரங்களை டிச.31 ஆம் தேதி மாலைக்குள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT