Published : 30 Dec 2020 02:25 PM
Last Updated : 30 Dec 2020 02:25 PM
தொலைதூரப் படிப்புகளுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்குத் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகளில் பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதையடுத்து இறுதிப் பருவத்தேர்வைத் தவிர, மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். இறுதிப் பருவத் தேர்வு இணையம் மூலம் நடத்தப்பட்டது.
இதற்கிடையே டிசம்பர் 7 முதல் இறுதியாண்டு மாணவர்களுக்காக உயர் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. ஐஐடி சென்னை, மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதம் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
இந்நிலையில் தொலைதூரப் படிப்புகளுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்குத் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி பயிலும் மாணவர்களுக்கான 2020 ஆகஸ்ட்- செப்டம்பர் மாத செமஸ்டர் தேர்வு, 2021 ஜனவரி மாதம் நடைபெறும். தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும். தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் https://coe1.annauniv.edu என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த, ஜனவரி 6 ஆம் தேதி கடைசி நாள். விரைவில் தேர்வுக்கால அட்டவணை அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://aucoe.annauniv.edu/pdf/distance/Notification_for_Distance_Exams_aug_sep_2020.pdf
தொலைபேசி எண்கள்: 044-22357300, 044-22357248
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT