Published : 29 Dec 2020 03:26 PM
Last Updated : 29 Dec 2020 03:26 PM
6 மாதங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகளுக்குச் செல்லாமல், ஆன்லைன் மூலமாகப் பாடங்களைக் கற்று வருகின்றனர். சில மாநிலங்களில் மட்டும் அக்டோபர் 15-ம் தேதிக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகின்றன.
எனினும் டெல்லியில் கரோனா தடுப்பூசி வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மதிய உணவு தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், 6 மாதங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி, மந்தவாலி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் இன்று உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
பின்பு பேசிய அவர், ''பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், மதிய உணவுக்கான பணத்தைப் பெற்றோர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்ப முடிவு செய்தோம். ஆனால், தற்போது 6 மாதங்களுக்கு மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளோம்.
குழந்தைகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதில் டெல்லி அரசு உறுதியாக உள்ளது'' என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.
கரோனா விடுமுறை காரணமாக, தமிழகத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சத்துணவுக்கான பொருட்களை நேரடியாக உலர் உணவுப் பொருட்களாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT