Published : 29 Dec 2020 03:06 PM
Last Updated : 29 Dec 2020 03:06 PM
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து பயிற்றுவித்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஜோலார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்தார்.
அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஹவுஸ் ஆப் கலாம் ராமேஸ்வரம், ஸ்பேஸ் இந்தியா லிமிடெட், சென்னை மார்ட்டின் குழுமம் சார்பில் 'அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி பேலோட் க்யூப்ஸ் சவால்-2021' என்ற நிகழ்ச்சி மூலம் நாடு முழுவதும் 500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த பயிற்றுவித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் இன்று (டிச.29) தொடங்கியது.
தமிழகத்தில் முதல் கட்டமாக 50 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச. 29) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சிஇஓ மார்ஸ் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.
தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
"முன்பெல்லாம் செயற்கைக்கோள் தயாரித்து விண்ணில் செலுத்துவது என்பது கடினமான காரியம். ஆனால், தற்போது அப்படியில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால் 25 கிராம் எடையுள்ள மிகச்சிறிய அளவிலான செயற்கைக்கோள் விரைவாகத் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்படுகிறது. நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமைக்குரியதாகும்.
புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். செயற்கைக்கோள் செயல்பாடுகள் என்ன? அதற்கான முயற்சிகளில் எப்படி ஈடுபடுவது? செயற்கைக்கோள் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை வரவேற்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்கள் இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி பெரிய விஞ்ஞானிகளாக வர வேண்டும்" என்றார்.
இதைத் தொடர்ந்து, செயற்கைக்கோள் செயல் திட்டம் குறித்து விஞ்ஞானி ஆனந்த் மாணவர்களிடம் பேசும்போது, "விண்வெளி தொழில்நுட்பத்தில் கண்கவர் உலகில் மறக்க முடியாத பயணத்தில் மாணவர்களின் மனதை ஈடுபடுத்துவதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதம் ஆகியவற்றில் பணிபுரிய நாடு முழுவதும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் சுமார் 1,000 மாணவர்களுக்கு வழிகாட்டுதல், 100 பெம்டோ செயற்கைக்கோள்களின் வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கான அறிவுத் திறன்களைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.
ஒரு உயரமான பலூன் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் சிறிய வகை செயற்கைக்கோள்களைத் தயாரிக்க திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சென்னை மார்டின் குழுமம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் நிகழ்ச்சியானது, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி காலை 10.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.
இந்த செயற்கைக்கோள் மூலம் விவசாயம், கதிர்வீச்சு, இயற்கை கலப்பு பொருட்கள், அதிர்வு, காற்றின் வேகம், புவி வெப்பமடைதல், ஓசோன் குறைவு போன்றவை அடிப்படையாக கொண்ட ஆய்வுகளை நமக்கு நேரடியாக வழங்கும்.
இதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சகம், விமானத் தலைமையகம், விமான நிலைய ஆணையம் ஆகியவற்றில் இருந்து முறையாகப் பெறப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த உலக சாதனையை கின்னஸ் புத்தகம், இந்தியா புத்தக பதிவு மற்றும் ஆசிய புத்தகப் பதிவுகளில் இடம் பெற வைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT