Published : 26 Dec 2020 04:22 PM
Last Updated : 26 Dec 2020 04:22 PM

பொதுத்தேர்வு 2021: மாணவர்களின் பயம், அழுத்தத்தைப் போக்க ஆலோசகர்கள்- இலவசத் தொலைபேசி எண் அறிவிப்பு

கோவிட்-19 காலகட்டத்தில் பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகாத நிலையில், மாணவர்களின் பயம், குழப்பம், அழுத்தத்தைப் போக்க ஆலோசகர்கள் உளவியல் ஆலோசனை அளிக்கும் வகையில் மத்தியக் கல்வி அமைச்சகம் இலவசத் தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பொது முடக்கத்தால் மார்ச் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் தொற்று அச்சம் காரணமாகப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே சிபிஎஸ்இ எனப்படும் மத்தியக் கல்வி வாரியம் மற்றும் மாநிலக் கல்வி வாரியங்கள் பொதுத் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் தங்களது சந்தேகங்கள், கருத்துகளை ட்விட்டரில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் மத்தியக் கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து டிசம்பர் 4ஆம் தேதி மாணவர்களுடனும், 22ஆம் தேதி ஆசிரியர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடினார்.

அதில், 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எழுத்துத் தேர்வாக காகித முறையிலேயே நடைபெறும் என்றும், பிப்ரவரி மாதம் வரை பொதுத்தேர்வுகள் கிடையாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

எனினும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பாடத்திட்டம், கேள்வி முறை, தேர்வுத் தேதி ஆகியவை குறித்துத் தங்களின் சந்தேகங்கள், கேள்விகளை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ''மாணவர்களே நீங்கள் கவலையிலோ, பயத்திலோ, நிராதரவான நிலையிலோ உள்ளீர்களா? நீங்கள் எதற்கும் துன்பப்படத் தேவையில்லை. உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம்.

84484 40632 என்ற தேசிய இலவச தொலைபேசி எண்ணை அழைத்து எங்களின் ஆலோசகரிடம் பேசுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x