Published : 26 Dec 2020 02:59 PM
Last Updated : 26 Dec 2020 02:59 PM
8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க மேற்கொள்ளப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வுத் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களைத் தெரிவுசெய்யும் இத்தேர்வு (NMMS) அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வுத் தேதி: 21.02.2021.
இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்:
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்) 2020- 2021ஆம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000/- (ரூபாய்.1 லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்)-க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இத்தேர்வை எழுதத் தகுதியுடையவர் ஆவார்.
விண்ணப்பிக்கும் முறை
1. NMMS தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமையாசிரியர்கள் தேவையான விண்ணப்பங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
2. தலைமை ஆசிரியர்கள், விண்ணப்பங்களை நடப்புக் கல்வியாண்டில் எட்டாம் வகுப்புப் பயின்று வரும் தகுதியுடைய மாணவர்களிடம் கொடுத்து, பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.
3. புகைப்படம் ஒட்டிப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்வர்கள், தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50/- உடன் 08.01.2021-க்குள் ஒப்படைத்தல் வேண்டும்.
4. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் இணையதள முகவரி குறித்தான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
5. பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நாட்கள் குறித்த விவரம் பெறப்பட்டவுடன், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகிலுள்ள வட்டார வள மையங்களின் (BRC) உதவியுடன் இணையதள வசதி கொண்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பதிவு செய்தல் வேண்டும்.
6. தலைமையாசிரியர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்தபின் அனைத்து விண்ணப்பங்களையும் ஒரே கட்டமாகவும் , மொத்தத் தேர்வுக் கட்டணத்தையும் ரொக்கமாக, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள் குறித்தும் பின்னர் தெரிவிக்கப்படும்.
7. காலதாமதமாகப் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் கட்டாயமாக நிராகரிக்கப்படும். புறச்சரகப் பதிவெண் கொண்டு தேர்வெழுதத் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய நாட்கள்- 28.12.2020 முதல் 08.01.2021 வரை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தேர்வுக் கட்டணம் தேர்வர்களிடமிருந்து பெற கடைசி நாள்- 08 .01.2021.''
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT