Published : 23 Dec 2020 06:50 PM
Last Updated : 23 Dec 2020 06:50 PM
ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் பங்கேற்க, முதன்முறையாகக் காரைக்காலைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய அரசின் குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்க, இந்திய அளவில் ஒதுக்கப்பட்ட புதுச்சேரிக்கான இரண்டு இடங்களுக்கும், இந்த ஆண்டு முதன்முறையாக காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். நான்கு கட்டப் படிநிலைகளுக்குப் பின்னர் இம்மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் வினோத்குமார், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி மாணவி அர்ச்சனா மற்றும் காத்திருப்போர் பட்டியலில் பெருந்தலைவர் காமராஜர் கல்வியல் கல்லூரி மாணவர் எபிநேசர், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி அமலி ஆகிய நால்வரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (டிச.23) நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியர் அர்ஜூன் சர்மா பாராட்டிக் கவுரவித்தார்.
இதற்காகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் லட்சுமணபதி மற்றும் திட்ட அலுவலர்கள், அணிவகுப்புப் பயிற்சி பொறுப்பாளர் வே.அருள்முருகன் மற்றும் தன்னார்வப் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். அப்போது துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, மாவட்ட அளவில் எடுக்கப்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலகத்தின் கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் என நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT