Published : 22 Dec 2020 01:00 PM
Last Updated : 22 Dec 2020 01:00 PM
இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி நீளமான ஓவியத்தை வரைந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி அருகே பல்லியா மாவட்டம், தெஹ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் நேஹா சிங். இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நுண்கலை படித்து முடித்து, தற்போது முதுநிலைப் படிப்பாக வேத அறிவியல் படித்து வருகிறார்.
இவர் புகழ்பெற்ற ’மோட்சத்துக்கான மரம்’ (tree of salvation) என்ற ஓவியத்தை 675.12 சதுர அடி (62.72 சதுர மீட்டர்) நீளத்தில் வரைந்துள்ளார். முழுக்க முழுக்க இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. குறிப்பாகக் காலாவதியான மசாலா உணவுப் பொருட்களைக் கொண்டு ஓவியம் தீட்டியுள்ளார்.
இதற்காக நேஹா சிங், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் பல்லியா மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ஷாஹி, நேஹாவின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று, பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன் சாதனை புரிந்ததற்கான கின்னஸ் சான்றிதழையும் வழங்கி உள்ளார்.
முன்னதாக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷ்ரேயா என்பவர் 588.56 சதுர அடியில் வரைந்த ஓவியம் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருந்தது. இந்தச் சாதனையை நேஹா சிங் முறியடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT