Published : 21 Dec 2020 01:39 PM
Last Updated : 21 Dec 2020 01:39 PM
கோவிட்-19 காலகட்டத்தில் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகாத நிலையில், பள்ளிகள் ஆன்லைனில் மாதிரிப் பொதுத் தேர்வுகளை நடத்தி வருகின்றன.
நாடு முழுவதும் கரோனா பொது முடக்கத்தால் மார்ச் 16 முதல் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அக்டோபர் 15 முதல் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் தொற்று அச்சம் காரணமாகப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே சிபிஎஸ்இ எனப்படும் மத்தியக் கல்வி வாரியம் மற்றும் மாநிலக் கல்வி வாரியங்கள் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எழுத்துத் தேர்வாக காகித முறையிலேயே நடைபெறும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு, பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாதிரிப் பொதுத் தேர்வுகளை நடத்தி வருகின்றன.
இதுகுறித்து டெல்லி, ரோஹினி பகுதியில் உள்ள எம்ஆர்ஜி பள்ளி முதல்வர் பிரியங்கா பராரா கூறும்போது, ''பேரிடர்க் காலகட்டத்திலும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஆஃப்லைன் மூலம் நடைபெற்றன. இதன் மூலம் பொதுத் தேர்வுகளும் காகித முறையிலேயே நடைபெறும் என்பது தெரிகிறது.
எனினும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருதி, இணையம் மூலம் மாதிரிப் பொதுத் தேர்வை நடத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தார்.
இதுபற்றி காஸியாபாத் பகுதியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் பல்லவி உபாத்யாயா கூறும்போது, ''சிபிஎஸ்இ விதிமுறைகளைப் பின்பற்றித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதலாக எம்எஸ் தளம் மூலம் பிடிஎஃப் வடிவில் கேள்விகளை அனுப்புகிறோம். மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த பின்னர் விடைத் தாள்களை ஸ்கேன் செய்து, அதை இ-மெயில் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.
எனினும் ஜனவரி மாதம் நேரடியாக மாணவர்களை வரவழைத்துப் பொதுத் தேர்வுக்கு முந்தைய தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் நாளை (டிச.22) சிபிஎஸ்இ ஆசிரியர்களுடன் நடத்தவுள்ள கலந்துரையாடலுக்குப் பிறகு பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT