Published : 18 Dec 2020 06:54 PM
Last Updated : 18 Dec 2020 06:54 PM
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களைப் பெறாமல் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு பத்து சதவீத ஒதுக்கீட்டுக்கு 17 இடங்களைச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளதற்கு அதிமுக, பெற்றோர் மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது சமூக நீதிக்கு எதிரானது எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் சென்டாக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடியே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். அதனால் நடப்புக் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்பது உறுதியானது.
அத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இச்சூழலில் முதல்முறையாக தற்போது 69 சத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாகப் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குப் பத்து சதவீத இடங்களைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கி, புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக கிழக்கு மாநிலச் செயலர் அன்பழகன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டிற்கு முன் மத்திய அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்படுத்தப்பட்ட பிரிவினர் (EWS) நலனிற்காக 10 சதவீத ஒதுக்கீட்டை மருத்துவம் சார்ந்த உயர் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அளித்தது. அதைச் சரிசெய்ய, அரசு மருத்துவக் கல்லூரியில் மத்திய அரசு கூடுதலாக 10 சதவீத இடங்களை வழங்கியது. புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் அதை ஏற்று உடனடியாக அமல்படுத்தின. .அதற்காக ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை மத்திய அரசு வழங்கியது.
தற்போது புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே அரசுக்கு இட ஒதுக்கீட்டை வழங்குகின்றன. இந்த மூன்று கல்லூரிகளிலும் மொத்தமுள்ள 450 இடங்களில் 225 இடங்களை வழங்காமல் 167 இடங்களை மட்டுமே அரசுக்கு வழங்கி வருகின்றன.
இந்நிலையில் நடைபெற இருக்கும் சென்டாக் கலந்தாய்வுக்காக இந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பெறப்பட்ட 167 இடங்களுக்கான இட ஒதுக்கீட்டைப் புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி 167 இடங்களில் 10 சதவீதம் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு 17 இடங்களை உள் ஒதுக்கீடாகப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு தனி ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான கூடுதல் இடங்களை அரசு பெறவில்லை. இது புதுச்சேரி ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
இந்த அறிவிப்பைத் திரும்பப்பெறவில்லை என்றால் இதுசம்பந்தமாகச் சட்டரீதியான நடவடிக்கையை அதிமுக எடுக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல்வாழ்வு சங்கத்தலைவர் பாலா கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு அளித்துள்ள மனுவில், ''தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குப் பத்து விழுக்காடு மருத்துவ இடங்களை அளிப்பது சமூக நீதிக் கோட்பாட்டுக்கு முரண். முன்புள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உள்ஒதுக்கீடாகத் தாரை வார்ப்பது ஓபிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி. புதுச்சேரி அரசும், சுகாதாரத் துறையும் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்று, முன்பு பின்பற்றப்பட்ட 69 சத இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி அரசு ஒதுக்கீட்டில் உள்ள மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT