Published : 18 Dec 2020 05:41 PM
Last Updated : 18 Dec 2020 05:41 PM
கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
கரோனா காரணமாகத் தள்ளிப்போன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கைப் பணிகள் தற்போது நிறைவடைந்து வருகின்றன. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்களுக்கும் புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
''கல்வி நிறுவனங்களில் இணைந்த மாணவர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக, நவம்பர் 30-ம் தேதிக்குள் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்தால் அவர்களிடம் இருந்து வசூலித்த முழுக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும். பிடித்தக் கட்டணமாக ஒரு ரூபாயைக் கூடத் திருப்பி அளிக்காமல் இருக்கக் கூடாது.
அதே நேரத்தில் டிசம்பர் 31-ம் தேதி வரை கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய கட்டணத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.1000 மட்டுமே குறைத்து அளிக்கப்பட வேண்டும்.
அதேபோல திருப்பித் தர வேண்டிய தொகையைக் கல்லூரிகள் கண்டிப்பாக மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். தாமதப்படுத்துவது யுஜிசி விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்''.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT