Published : 18 Dec 2020 05:16 PM
Last Updated : 18 Dec 2020 05:16 PM
அரசுப் பள்ளிகளுக்குச் சூட்டிய சாதி அடைமொழியுடன் கூடிய அரசியல் தலைவர்களின் பெயர்களைப் புதுச்சேரி கல்வித் துறை மாற்ற உள்ளது.
புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாகக் கடந்த டிச.2 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டன. அந்த அரசாணைகளில் புதுச்சேரி மாநிலத்தின் அரசுப் பள்ளிகளுக்கு, சாதிப் பெயர்களுடன் கூடிய அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூட்டுவது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இதற்குப் பல்வேறு தரப்பிகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் இந்திய மாணவர் சங்கப் புதுச்சேரி பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ், துணைச்செயலர் வந்தனா, நிர்வாகிகள் பிரவீண், தனசீலன் ஆகியோர் கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடுவை இன்று சந்தித்தனர். அவர்கள் கொடுத்த கடிதத்தில், "அரசுப் பள்ளிகளுக்குச் சாதி அடைமொழியுடன் கூடிய அரசியல் தலைவர்களின் பெயர்களை வைப்பது கண்டனத்துக்குரியது. உடனே அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்துக் கல்வித்துறை இயக்குநர், உடனடியாக அரசுப் பள்ளிகளின் பெயர் குறித்த அரசாணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், ஏற்கனவே சாதிப் பெயருடன் கூடிய தலைவர்களின் பெயர்கள் இருக்கக்கூடிய பள்ளிகளின் பெயர்களையும் சேர்த்து மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT