Published : 17 Dec 2020 12:32 PM
Last Updated : 17 Dec 2020 12:32 PM

மாணவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, உளவியல் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழிப் பயிற்சி 

கரோனா பரவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு குறித்து இணைய வழியில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்டப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் சாா்ந்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

நோய்த்தொற்று பரவும் அசாதாரண சூழலில், பள்ளி மாணவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துவதும், தன் சுத்தத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலைப் பள்ளிகளில் ஏற்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், மாணவர்களின் உளவியல் சார்ந்த பாதுகாப்பு அம்சங்கள், மாணவர்களின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கும் கடமைகளும் ஆகிய தலைப்புகளில் இணையவழியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நோய்த்தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் க்யூஆா் குறியீட்டுடன் கூடிய விழிப்புணர்வுக் காணொலிகள், ஆகியவற்றை உள்ளடக்கி, டிச.16 முதல் டிச.22 ஆம் தேதி வரையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

முதல் நாளில் (டிச.16) அனைத்துப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிச.17-ஆம் தேதி அனைத்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், டிச.18, 19 ஆகிய இரு நாட்கள் அனைத்துப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், டிச. 21, 22 தேதிகளில் அனைத்து இடைநிலை ஆசிரியா்களுக்கும் இணைய வழியில் பயிற்சி வழங்கப்படும்.

ஆசிரியர்கள் பயிற்சி பெற்ற பின்னர், பள்ளிகள் திறந்த பிறகு மாணவா்களிடையே இவற்றைக் கொண்டுசேர்த்து அவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பாதுகாப்பு உணர்வுடன் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x