Published : 14 Dec 2020 09:11 PM
Last Updated : 14 Dec 2020 09:11 PM
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து, வளாகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் இனியன் தெரிவித்துள்ளார்.
கரோனா பொது முடக்கத் தளர்வுகளில் ஒரு பகுதியாக டிசம்பர் 7ஆம் தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கவும் விடுதிகள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இதைத் தொடர்ந்து ஐஐடி சென்னையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இதற்காக விடுதியில் மாணவர்கள் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், ஒரு மாணவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து 2 மாணவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகத் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் இனியன், ’’ஒரே ஒரு மாணவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து 2 மாணவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னொரு மாணவரையும் சேர்த்து 2 மாணவர்களுக்கு, சைதாப்பேட்டை கரோனா பரிசோதனை மையத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாகும்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட மாணவர் வசித்த பகுதியில் இருந்த 10 மாணவர்களும் தனித்தனியாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு தனியாக வழங்கப்பட்டு வருகிறது.
விடுதிகளில் இறுதியாண்டு மாணவர்கள் 700 பேர் உள்ளனர். இவர்களில் காய்ச்சல் குறித்த சந்தேகம் உள்ளவர்களுக்குத் தனியாகப் பரிசோதனை மையம் அமைக்க உள்ளோம். எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதிகள் தொடர்ந்து கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன’’ என்று இனியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT