Published : 14 Dec 2020 03:30 PM
Last Updated : 14 Dec 2020 03:30 PM

கரோனாவால் இறந்த புதுச்சேரி முன்களப் பணியாளர்களின் வாரிசுகள்: 5 எம்பிபிஎஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுச்சேரி

கரோனாவால் இறந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கான 5 எம்பிபிஎஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்க, புதுச்சேரியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிப் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

''மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், கரோனாவால் இறந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு புதுச்சேரியில் 5 எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவ ஆலோசனைக் குழு, சுகாதார அறிவியல் இயக்குநரகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தேசியத் தேர்வுகள் முகமை கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய நீட் தேர்வில் தகுதி பெற்ற, இறந்த கோவிட் பணியாளர்களின் வாரிசுகள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இறந்த கோவிட் பணியாளர்களின் வாரிசுகள், விண்ணப்ப விவரம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, இறந்த கோவிட் பணியாளரின் அலுவலகத் தலைவர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாகப் புதுச்சேரி சுகாதாரத் துறை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 21.12.2020 ஆகும்.

எனவே புதுச்சேரி மாணவர்கள், முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குநரகத்துக்கு 17.12.2020 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.''

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x