Published : 10 Dec 2020 05:40 PM
Last Updated : 10 Dec 2020 05:40 PM

பொறியியல் மாணவர்களுக்கு டிச.17 முதல் ஆன்லைன் செய்முறைத் தேர்வு: விதிமுறைகள் வெளியீடு

பொறியியல் மாணவர்களுக்கு டிச.17 முதல் ஆன்லைனில் செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம் சுயநிதி அல்லாத அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''* உயர் கல்வி மாணவர்களுக்கு நவம்பர் மற்றும டிசம்பர் 2020-க்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

* அதன்படி, இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஆன்லைன் மூலம் டிசம்பர் 17 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

* செய்முறைத் தேர்வுகள் இணையம் மூலம் பிரபல வீடியோ சேவைகள் மூலம் நடத்தப்பட வேண்டும்.

* ஆய்வகப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் புற மதிப்பீட்டு வினாக்கள் அயலகத் தேர்வுக் கண்காணிப்பாளரால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

* செய்முறைத் தேர்வு வினாக்களுக்குப் பதில் அளிக்க, மாணவர்கள் ஏ4 தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* இந்த ஆன்லைன் தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும்.

* செய்முறைத் தேர்வை எழுதி முடித்த பிறகு அதன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை, மாணவர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு நடத்துபவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

* தேர்வை நடத்துபவர்கள் தேர்வுத்தாள் நகலை மண்டல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். அதை மண்டல அலுவலகங்கள் கல்லூரிகள் வாரியாகப் பிரித்துவைத்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

* செய்முறைத் தேர்வு நடைபெறும் நேரத்தில் பறக்கும் படைக் குழுவினர் ஆன்லைனில் கண்காணிக்கத் தேர்வுக் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x