Published : 02 Dec 2020 04:47 PM
Last Updated : 02 Dec 2020 04:47 PM
வயது வந்தோர் புதிய கல்வித் திட்டத்தில், கோவை மாவட்டத்தில் 12,188 பேருக்குக் கற்பித்தல் வகுப்பு தொடங்கியது.
பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 'கற்போம் எழுதுவோம்' என்னும் இயக்கம், பள்ளிக் கல்வித்துறையால் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தை எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மேம்படுத்தும் வகையில், 15 வயதுக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு போதிக்கப்பட உள்ளது.
இதன்படி கோவை மாவட்டத்தில் 688 கற்போம், எழுதுவோம் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மையத்திற்கு ஒரு தன்னார்வலர் வீதம், 688 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் எழுதப் படிக்கத் தெரியாத 12,188 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களுக்குக் கற்பித்தல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து மையங்களையும், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்துக் கல்வித்துறையினர் கூறும்போது, ''இத்திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு மதியம், மாலை நேரங்களில் வகுப்புகள் நடைபெறும். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அனைத்துக் கற்றல் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்துள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதற்கட்டமாக ஒரு மையத்திற்கு 20 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 மணி நேரம் வகுப்பு நடக்கும். அதில் எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்கப்படும். சந்தேகங்கள் எழுந்தாலும் பயிற்றுநர்கள் விளக்கம் அளிப்பர். வாக்களிப்பது நம் கடமை. தூய்மை பாரதம், முதலுதவி, பெண் கல்வி, பணமில்லாப் பரிமாற்றம், பசுமைத் தோட்டம் உட்பட 28 தலைப்புகளில் பாடங்கள் உள்ளன'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT