Published : 02 Dec 2020 12:12 PM
Last Updated : 02 Dec 2020 12:12 PM

தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பின் இன்று கல்லூரிகள் திறப்பு: பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் மாணவர்கள் வருகை

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், 8 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. அரசு வழிகாட்டிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் மாணவர்கள் வருகை தந்தனர்.

கரோனா பரவல் காரணமாகக் கடந்த 8 மாதங்களாகக் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி இறுதியாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டும் செய்முறை வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது என்பதாலும் அவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, டிசம்பர் 2-ம் தேதியன்று முதுகலை அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்குக் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.

அதன் அடிப்படையில்,8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., எம்.எஸ்சி. ஆகிய முதுகலைப் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி இன்று (டிசம்பர் 2 ஆம் தேதி) கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

கல்லூரிகளில் தனிமனித இடைவெளி, முகக்கவசம், உடல் வெப்பநிலைப் பரிசோதனை, சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளங்கலை வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி முதல் கல்லூரிகளும் விடுதிகளும் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x