Published : 01 Dec 2020 12:48 PM
Last Updated : 01 Dec 2020 12:48 PM
புதுச்சேரியில் 8 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.
கரோனா நோய்த் தொற்று காரணமாக புதுச்சேரியில் மூடப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படிப்படியாகச் செயல்பட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி படிப்படியாக மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து முதல்கட்டமாக இரண்டு தனியார் கல்லூரிகளான பிம்ஸ், மகாத்மா காந்தி கல்லூரி ஆகியவை இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து அதன் மேல் முக அங்கியும் அணிந்திருந்தனர். மாணவர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஆறு அடி இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். காலை, மாலை என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பெற்றோர் கடிதத்துடன் வரும் மாணவ, மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்துச் சுகாதாரத்துறை தரப்பில் கூறும்போது, "கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களிடையே சமூக இடைவெளி, தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து மாணவர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். சிறப்புப் பேச்சாளர்களைக் கொண்டு சொற்பொழிவு நடத்துவது, மாணவர்கள் சுற்றுலா செல்வது, களப் பயணம் செல்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்கு அவை, விளையாட்டுத் திடல், உடற்பயிற்சி மையம், கேன்டீன், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றில் இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். கல்லூரியில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்பதைக் கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்தக் கோரியுள்ளோம்.
மாணவர்களுக்கு இடையே ஆறு அடி தூரம் இடைவெளி தேவை என்பது போன்ற மத்திய அரசின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற, புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்துக் கல்லூரிகளும் 7ஆம் தேதிக்குள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT