Published : 30 Nov 2020 05:38 PM
Last Updated : 30 Nov 2020 05:38 PM
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், தமிழகத்தில் 14 உறுப்புக் கல்லூரிகளும் 28 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
இக்கல்லூரிகளில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை, பி.டெக். வேளாண்மைப் பொறியியல், உயிரி தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம் ஆகிய 10 இளநிலைப் பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்படிப்புகளின் முதலாமாண்டில், உறுப்புக் கல்லூரிகளில் 1,600 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 3,100 இடங்களும் என மொத்தம் 4,700 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை 2020-2021 ஆம் கல்வியாண்டில் நிரப்புவதற்கான இணையவழி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இன்று (நவ. 30) சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 14 இடங்களில் 12 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் 38 பேரும் கலந்து கொண்டு விரும்பிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்தனர். அவர்களுக்குப் பதிவாளர் ஏ.எஸ்.கிருட்டிணமூர்த்தி சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
இது குறித்து டீன் எம்.கல்யாணசுந்தரம் கூறும்போது, 'முன்னாள் ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் முதல் இடத்தைப் பெற்ற மாணவி இலக்கிய தென்றல், கோவை வேளாண்மைக் கல்லூரியையும், இரண்டாமிடத்தைப் பெற்ற மாணவர் ஞா.தாம்சன், கோவை தோட்டக்கலைக் கல்லூரியையும், மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவி சி.லோகவர்ஷினி மதுரை வேளாண்மைக் கல்லூரியையும் தேர்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக நாளை (டிச.1) காலை விளையாட்டு வீரர்களுக்கும், பிற்பகல் தொழிற்கல்வி பயின்றவர்களுக்கும் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT