Published : 30 Nov 2020 12:16 PM
Last Updated : 30 Nov 2020 12:16 PM

புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவு மருத்துவக் கலந்தாய்வு மீண்டும் தொடங்கியது: 389 பேருக்கு அழைப்பு

சென்னை

நிவர் புயலால் தள்ளி வைக்கப்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. 20-ம் தேதி வரை 3 நாட்களுக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு நடந்தது. இதையடுத்து, 21-ம் தேதி மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 23-ம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாள் மட்டும் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை நடைபெற இருந்த 5 நாட்கள் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் புயலால் தள்ளிவைக்கப்பட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. நீட் தேர்வில் 630 முதல் 610 வரை மதிப்பெண்கள் பெற்ற 389 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 26 அரசுக் கல்லூரிகளில் உள்ள 2,747 இடங்களில் 307 இடங்கள் நிரம்பியுள்ளன. அதேபோல 15 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 1,061 இடங்களில் ஓரிடம் மட்டும் நிரம்பியுள்ளது.

இன்று தொடங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு டிச.10-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x