Published : 23 Nov 2020 04:25 PM
Last Updated : 23 Nov 2020 04:25 PM
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக தொடக்கப்பள்ளிக் கட்டிடங்களை புதுப்பித்து வருகிறது புதுச்சேரியைச் சேர்ந்த 'பெயின்ட் பாண்டிச்சேரி' எனும் அமைப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் பரிகம் எனும் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 80 மாணவர்கள் வரை பயிலும் நிலையில், பள்ளிக் கட்டிடங்கள் திடீரென பல வண்ணங்களில் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் மாறியிருந்தன. இதைக்கண்ட மலைவாழ் மக்கள், பள்ளியை ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.
இதுகுறித்து அப்பள்ளியின் ஆசிரியர் அமுதனிடம் பேசியபோது, ''மலையில் இயங்கிவரும் இப்பள்ளி காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. பழைய பள்ளி என்றாலும், பள்ளியில் சூழல் சரியில்லாததால், மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே போனது.
இந்த நிலையில் எங்கள் பள்ளியில் நிலைகுறித்து புதுச்சேரியைச் சேர்ந்த 'பெயின்ட் பாண்டிச்சேரி' அமைப்பின் தலைவர் மகேஷ் என்பவர் எங்களைத் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். பின்னர் அந்தக் குழுவினர் எங்கள் பள்ளிக்கு வந்து, பள்ளிச் சூழலை மாற்றும் வகையில் பல வண்ணங்களில் வர்ணம் தீட்டி, பள்ளிக்குப் புதுப்பொலிவை ஏற்படுத்தினர்'' என்றார்.
இதையடுத்து 'பெயின்ட் பாண்டிச்சேரி' அமைப்பைச் சேர்ந்த மகேஷிடம் கூறும்போது, ''எனது பெற்றோர்கள் இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். நான் பொறியாளராக இருக்கிறேன். அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து என் பெற்றோர்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன். அதனால்தான் அரசுப் பள்ளிகளுக்கு உதவுவதோடு, அவற்றின் தரத்தையும் உயர்த்தவேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கினேன்.
எனது நண்பர்களாக உள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் பங்களிப்புடன் பள்ளிகளுக்கு வர்ணம் தீட்டும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இதற்குக் காரணம் கிராமப்புறங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகள் போதிய பொலிவின்றி, பராமரிப்பின்றிக் காணப்படும். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளைப் பளபளப்புடன் தூய்மையாக வைத்திருப்பர். எனவே பெற்றோர்கள் அவற்றை நோக்கியே நகரும் சூழல் நிலவுகிறது.
அதை மாற்றவேண்டும் என்ற உந்துதலோடு, பள்ளியின் சூழல் கட்டமைப்பை மெருகேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக்கு வர்ணம் தீட்டி, மாணவர்களைக் கவரும் வகையிலான ஓவியங்களை வரைந்து வருகிறோம். குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இதைச் செயல்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் இதுவரை 38 பள்ளிகளில் இதுபோன்ற வர்ணங்களை தீட்டியுள்ளோம். பல பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்திக்கிறது என்ற தகவலே எங்கள் அமைப்புக்குக் கிடைத்த வெற்றி'' என்றார் மகேஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT