

புதுச்சேரியில் நடைபெற்ற கோவிட் புத்தாக்கச் சவால் போட்டியில் நேரடித் தொடர்பில்லாமல் உடல்வெப்ப நிலை கண்டறிதல் உள்ளிட்ட மூன்று யோசனைகள் தேர்வாகியுள்ளன. இத்திட்டங்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவு அளித்து, அவற்றை வர்த்தக ரீதியில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொறியியல் கல்லூரி அறக்கட்டளை- அடல் இன்குபேஷன் மையம் இணைந்து கோவிட் புத்தாக்கச் சவால் போட்டியை நடத்தியது. இதில் கரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போரிட உதவும் யோசனைகளுக்காகப் போட்டி நடந்தது.
இப்போட்டியில் உடல் வெப்பநிலையை நேரடித் தொடர்பில்லாமல் உறுதிப்படுத்தும் ஸ்கிரீனிங் சாதனமான "கேட்ஸ் ஐ" யோசனை, உள்ளூர்ப் பொருட்களைத் தேவைக்கு ஏற்ப வாங்கும் அங்காடிச் செயலிக்கான யோசனை, மின் வேதியியல் அடிப்படையில் நீர்த் தொற்றை நீக்கும் யோசனை ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் அடையாளம் காணப்படும் திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்கி, அதை வர்த்தக ரீதியிலான தயாரிப்புகளாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அடல் இன்குபேஷன் மையம்- புதுச்சேரி பொறியியல் கல்லூரி அறக்கட்டளை செயலாக்க இயக்குநர் டாக்டர் சுந்தரமூர்த்தி கூறுகையில், " முன்னெப்போதும் சந்தித்திராத நிச்சயமற்ற தன்மை நிலவும் காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் மிகச்சிறந்த யோசனைகளை முன்வைத்தனர். இந்தப் போட்டிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 7 சிறந்த யோசனைகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. இறுதியில் 3 யோசனைகள் தேர்வு செய்யப்பட்டன.
தேர்வான வெற்றியாளர்களுக்குப் பரிசுத்தொகை தரப்படும். அவர்களின் புதிய சிந்தனையை மேம்படுத்தி, வர்த்தக ரீதியில் தயாரித்து, விற்பனை செய்ய வழிகாட்டப்படும். இந்தப் புத்தாக்கச் சிந்தனைகள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும்" என்று தெரிவித்தார்.