Published : 20 Nov 2020 05:21 PM
Last Updated : 20 Nov 2020 05:21 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள்: பெற்றோர், கிராமத்தினர் மகிழ்ச்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளதை அடுத்து அவர்களின் பெற்றோரும், கிராமத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், 2020 -2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ்,பிடிஎஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ள 313 எம்பிபிஎஸ், 92 பிடிஎஸ் என 405 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் நாளில், 235 பேர் மருத்துவ இடங்களைப் பெற்றனர். இதற்கிடையே, 2-வது நாளான நேற்றைய கலந்தாய்வில் 374 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், 303 மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 மாணவ, மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன.

கீரமங்கலத்தைச் சேர்ந்த மாணவிகள் திவ்யா, பிரசன்னா, தரணிகா, ஜீவிகா மற்றும் மாணவர் ஹரிஹரன் ஆகியோர் மருத்துவப் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பெற்றோர்களும் கிராம மக்களும் மழ்ச்சியுடன் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கலந்தாய்வில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான திவ்யா, பிரசன்னா ஆகியோர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியையும், தரணிகா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், ஜீவிகா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்தனர். கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரிஹரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார்.

இதுகுறித்து மாணவி பிரசன்னா கூறும்போது, ''ஏழையாக இருந்தாலும் சரி, அரசுப் பள்ளியில் சேர்ந்தாலும் சரி, படித்தால் மருத்துவராகிச் சாதிக்க முடியும்'' என்று தெரிவித்தார்.

மாணவி ஜீவிதா பேசும்போது, ''நாங்கள் படித்த பள்ளிக்கும் கிராமத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உள் ஒதுக்கீடு மூலம் வருங்காலத்தில் இன்னும் அதிக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆவார்கள்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x