Published : 20 Nov 2020 01:42 PM
Last Updated : 20 Nov 2020 01:42 PM
கோவை பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு டிச.15-ம் தேதி தொடங்குகிறது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகத் துறைகள், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வாணையர் (பொ) ஆர்.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. டிச.15-ம் தேதி முதல் தாளுக்கும், 17-ம் தேதி இரண்டாம் தாளுக்கும், 19-ம் தேதி மூன்றாம் தாளுக்கும் தேர்வு நடைபெறும்.
பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத் துறைகளிலும், தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி மாணவர்களுக்கு உடுமலை கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதகை அரசு கலைக் கல்லூரியிலும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு டாக்டர் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரியிலும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியிலும் தேர்வு நடைபெறும்.
புதிதாக விண்ணப்பித்த மாணவர்களுக்குப் பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. அதைச் சரிபார்த்து உரிய மையத்திற்குச் சென்று தேர்வு எழுத வேண்டும். நுழைவுச் சீட்டு டிச.11-ம் தேதி அந்தந்த மையங்களில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT