Published : 18 Nov 2020 05:10 PM
Last Updated : 18 Nov 2020 05:10 PM

எம்பிபிஎஸ் இடம் என்ற ஞானப்பழம் தரும் பழனிசுவாமியாக முதல்வர் பழனிசாமி: அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம் 

மருத்துவ எம்பிபிஎஸ் இடம் என்ற ஞானப்பழம் தரக்கூடிய பழனிசுவாமியாக முதல்வர் பழனிசாமி உள்ளார் என்று மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு முதலில் நடைபெற்று வருகிறது. முதல் 10 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான இட ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

முன்னதாக இந்நிகழ்வில் சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். முதல்வரின் சிந்தனையில் உதித்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவச் சேர்க்கை நடைபெறும் நாள் இது.

ஆர்ப்பரித்து எழும் கடலலைகளுக்கு நடுவே தத்தளித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்குக் கலங்கரை விளக்கமாக முதல்வர் திகழ்கிறார். வரம் தரும், வாழ்வு தரும் சாமியாக முதல்வர் இருக்கிறார்.

7.5 % இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுடன் முதல்வ‌ர் பழனிசாமி.

மருத்துவ எம்பிபிஎஸ் இடம் என்ற ஞானப்பழம் தரக்கூடிய பழனிசுவாமியாக முதல்வர் பழனிசாமி இங்கே வருகை தந்துள்ளார். எந்த மாணவரோ, பெற்றோரோ, கட்சியோ இட ஒதுக்கீடு குறித்துக் கோரிக்கை வைக்கவில்லை. போராடவில்லை. அரசுப் பள்ளியில் படித்த மாணவனாக, உணர்வுகளைப் புரிந்துகொண்டு முதல்வர் இதைச் செயலாற்றி இருக்கிறார்.

மருத்துவ இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பதை அவர்தான் சிந்தித்து, திட்டமிட்டு, செயல்படுத்த எங்களுக்கு ஆணையிட்டார். அவர்தான் உங்களுக்காக (அரசுப் பள்ளி மாணவர்கள்) அரசாணை வெளியிட்டார். கலந்தாய்வில் சேர்க்கை ஆணைகளையும் ஸ்டெதஸ்கோப்பையும் வழங்க உள்ளார். ஸ்டெதஸ்கோப்பில் லப் டப் ஒலியோடு அவரின் புகழும் வான் உள்ளவரை ஒலிக்கும்''.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x