Published : 18 Nov 2020 12:13 PM
Last Updated : 18 Nov 2020 12:13 PM

மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது: முதல்வர் வருவதால் 7.5% உள் ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலில் சேர்க்கை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக 3,032 எம்பிபிஎஸ் இடங்கள், 165 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதேபோல், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147 எம்பிபிஎஸ் இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065 பிடிஎஸ் இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதற்கிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 23,707 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,276 பேரும் இடம்பெற்றனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு (405 இடங்கள்) வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 951 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இதற்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு முதலில் நடைபெறுகிறது. நண்பகலில் முதல் 10 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான இட ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். இதனால் இன்று நடைபெற இருந்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடைபெற்று, மாதிரிகள் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட உள்ளன. 2 மணி நேரத்தில் முடிவுகள் தெரியவந்ததும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அனுப்பப்படுவர். அதுவரை அவர்கள் காத்திருக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x