Published : 13 Nov 2020 05:59 PM
Last Updated : 13 Nov 2020 05:59 PM

மருத்துவக் கலந்தாய்வு 17-ம் தேதி தொடக்கம்?- தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்

சென்னை

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு 17-ம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்று மற்றும் ஊரடங்கின் காரணமாகவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு காரணமாகவும் தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப் போயுள்ளது.

இதற்கிடையே நவ.3-ம் தேதி முதல் நேற்று (நவ.12-ம் தேதி) மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். நவ.16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது. அரசு ஒதுக்கீட்டில் 21,154 இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்காக 14,078 இடங்களும் என ஒட்டுமொத்தமாக 38,232 மாணவர்கள் மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வில் சுமார் 57 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவில்லை.

இதற்கிடையே கலந்தாய்வுக்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மாணவர்களின் தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்றும், 17-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிறப்புப் பிரிவினருக்கு 17-ம் தேதியும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 18-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பொதுப் பிரிவினருக்கு 19-ம் தேதி கலந்தாய்வு தொடங்க உள்ளதாகவும் மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x