Published : 10 Nov 2020 09:34 PM
Last Updated : 10 Nov 2020 09:34 PM

கொத்தனாராகவும் தச்சராகவும் மாறிய அருணாச்சல் மாணவர்கள்; சமூக நூலகத்தை அமைத்து சாதனை

குவாஹாட்டி

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் மாணவர்கள் சிலர் கொத்தனாராகவும் தச்சராகவும் மாறி சமூக நூலகத்தை அமைத்து சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு மாநில முதல்வர் பேமா காண்டு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு இந்தியாவில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதி தவாங் இங்குள்ள இளைஞர்கள் இயல்பாகவே திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

அங்குள்ள இளைஞர்கள் சிலர் கொத்தனாராகவும் தச்சராகவும் மாறி சமூக நூலகத்தை அமைத்து சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து தவாங் மாவட்ட மாணவர்கள் சங்கத்தின் மாணவர் தலைவரும் நூலக அமைப்புக் குழுவின் பொறுப்பாளருமான பேமா செரிங் கூறும்போது, ''தவாங் தொலைதூர மாவட்டம் என்பதால் புத்தகங்கள் அரிதாகவே கிடைக்கும். இங்கு மாவட்ட நூலகம் இருந்தாலும் அது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் சமூக நூலகம் அமைக்க முடிவெடுத்தோம். சங்கத்தின் நிதி மற்றும் தன்னார்வலர்களின் உதவி கொண்டு நிதியைச் சேகரித்தோம்.

நாங்களே கொத்தனார்களாகவும் தச்சர்களாகவும் வேலை பார்த்துக் கட்டிடத்தை எழுப்பினோம். ரூ.6.5 லட்சம் செலவில் கான்க்ரீட் மற்றும் மரங்களைக் கொண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 40 நாட்களில் வேலையை முடித்தோம்.

இது மற்ற நூலகங்களைப் போல இருக்காது. பெரும்பாலும் உத்வேகத்தை அளிக்கும் புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்களே இங்கு அதிகம் உள்ளன. ஏராளமான நல்ல உள்ளம் கொண்டோர் புத்தகங்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.

இந்த இளைஞர்களுக்கு மாநில முதல்வர் பேமா காண்டு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x