Published : 04 Nov 2020 02:30 PM
Last Updated : 04 Nov 2020 02:30 PM

பள்ளி, கல்லூரிகள் திறப்பில் மாற்றமா?- கல்வித்துறை அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி, கல்வித்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்களுக்குக் கடந்த சில மாதங்களாக ஆன்லைன், தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகளில் 9,10,11,12 ஆம் வகுப்புகள், கல்லூரிகள் ஆகியவற்றை நவம்பர் 16-ம் தேதி முதல் திறக்கலாம் எனத் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. எனினும் பண்டிகைக் காலம் மற்றும் பருவமழைக் காலம் என்பதால் கரோனா தொற்று அதிகரிக்கலாம் எனப் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பள்ளிகள் திறப்பைத் தள்ளிப்போட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. ஆசிரியர் சங்கங்களும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கரோனா இரண்டாம் அலை உருவாகலாம் என்று பல்வேறு நாடுகளைச் சுட்டிக்காட்டி கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பைத் தள்ளி வைக்கலாமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி, கல்வித்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தச் சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பில், பள்ளி, கல்லூரிகள் திறப்பை டிசம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்கலாமா, ஒருவேளை பள்ளிகளைத் திறந்தால் உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாகப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தனது துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் (நவ.2) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். மீண்டும் நேற்று (நவ.3) பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார் ஐஏஎஸ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி, கல்வித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x