Published : 04 Nov 2020 01:24 PM
Last Updated : 04 Nov 2020 01:24 PM
மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 7.5% உள் இட ஒதுக்கீட்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 304 இடங்கள் வழங்கப்பட உள்ளன என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 3 அடுக்குப் பாதுகாப்புடன் சிசிடிவி மூலம் அனைத்தும் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இவற்றுக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. நவ.12-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவ.16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலந்தாய்வுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ''மொத்தம் 5,550 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 560 இடங்கள் அளிக்கப்பட்டன.
அரசு இட ஒதுக்கீட்டுக்கு 4,043 இடங்களும் தனியார் இட ஒதுக்கீட்டில் 897 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின்படி 3,650 அரசு இடங்களில் 227 இடங்களும், தனியார் இடங்களில் 77 இடங்களும் அளிக்கப்படும். இதன்மூலம் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடாக மொத்தம் 304 இடங்கள் வழங்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு ஆள்மாறாட்டம் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இந்த முறை, முறைகேடுகளைத் தடுக்க 3 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். கண் விழி, கைரேகை, புகைப்படம் ஆகிய மூன்றும் மாணவர்களுக்குக் கட்டாயம் பரிசோதிக்கப்படும். அதேபோல சிசிடிவி மூலம் அனைத்தும் பதிவு செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT