Published : 02 Nov 2020 12:49 PM
Last Updated : 02 Nov 2020 12:49 PM
அசாம் ஜேஇஇ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டவர் குவாஹாட்டி விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி முடிவடைந்தன. 6.35 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில் தேர்வு முடிவுகள் செப்.11-ம் தேதி நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றிருந்தனர்.
இதற்கிடையில், அசாமில் ஆள்மாறாட்டம் செய்து ஜேஇஇ மெயின் தேர்வில் 99.8% மதிப்பெண் பெற்றதாக மாணவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மித்ரதேவ் சர்மா என்னும் நபர் அக்.23-ம் தேதி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதில், குவாஹாட்டி தேர்வு மையத்தில் சம்பந்தப்பட்ட தேர்வருக்குப் பதிலாக செப்.5-ம் தேதி வேறொரு மாணவர் வந்து தேர்வெழுதியதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்குத் தேர்வு மையத்தில் உள்ள அதிகாரியும் உடந்தையாக இருந்ததாக மித்ரதேவ் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாகக் காவல்துறை, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. விசாரணையில் தேர்வரின் தந்தையும் (மருத்துவர்) 3 நபர்களும் கைது செய்யப்பட்டனர். தேர்வர், தான் செய்த மோசடியை நண்பர் ஒருவரிடம் போனில் பகிர்ந்துள்ள ஆடியோ கிடைத்துள்ளது.
இந்த மோசடியில் குவாஹாட்டியில் உள்ள தனியார் பயிற்சி மையத்துக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், முக்கியக் குற்றவாளியான தனியார் பயிற்சி மையத் தலைவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குவாஹாட்டியில் உள்ள லோக்ப்ரியா கோபிநாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது நடவடிக்கை நடைபெற்றது.
இதுகுறித்து அசாம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''குளோபல் எடு லைட் (Global Edu Light) எனப்படும் தனியார் பயிற்சி மையத்தின் உரிமையாளர் பார்கவ் தேகா கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் டிசிஎஸ் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மாணவர், அவரின் தந்தை உட்பட இதுவரை 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே தேசியத் தேர்வுகள் முகமையிடம் (என்டிஏ) கூடுதல் விவரங்களை அசாம் காவல்துறை கேட்டுள்ளது
நாடு முழுவதும் நுழைவுத் தேர்வுகளை நடத்த, டிசிஎஸ் நிறுவனத்தை என்டிஏ அவுட்சோர்ஸிங் செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT