Published : 29 Oct 2020 01:34 PM
Last Updated : 29 Oct 2020 01:34 PM
ஆள்மாறாட்டம் செய்து ஜேஇஇ மெயின் தேர்வில் 99.8% மதிப்பெண்கள் பெற்றதாகக் கூறப்படும் மாணவர் அசாமில் கைது செய்யப்பட்டார்.
ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி முடிவடைந்தன. தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 6.35 லட்சம் மாணவர் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 25% பேர் தேர்வெழுதவில்லை. இதற்கிடையே தேர்வு முடிவுகள் செப். 11-ம் தேதி நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றிருந்தனர்.
ஜேஇஇ மெயின் தேர்வில் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடிக்களில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படிக்க முடியும்.
இந்நிலையில், அசாமில் ஆள்மாறாட்டம் செய்து ஜேஇஇ மெயின் தேர்வில் 99.8% மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படும் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மித்ரதேவ் சர்மா என்னும் நபர் அக்.23-ம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், குவாஹாட்டி தேர்வு மையத்தில் சம்பந்தப்பட்ட தேர்வருக்குப் பதிலாக செப்.5-ம் தேதி வேறொரு மாணவர் வந்து தேர்வெழுதியதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்குத் தேர்வு மையத்தில் உள்ள அதிகாரியும் உடந்தையாக இருந்ததாக மித்ரதேவ் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாகக் காவல்துறை, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. விசாரணையில் தேர்வரின் தந்தையும் (மருத்துவர்) 3 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வர், தான் செய்த மோசடியை நண்பர் ஒருவரிடம் போனில் பகிர்ந்துள்ள ஆடியோ கிடைத்துள்ளது.
இந்த மோசடியில் குவாஹாட்டியில் உள்ள தனியார் பயிற்சி மையத்துக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் தேர்வருக்கும் புகார் அளித்தவருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT