Last Updated : 28 Oct, 2020 06:35 AM

 

Published : 28 Oct 2020 06:35 AM
Last Updated : 28 Oct 2020 06:35 AM

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் தாமதம்; பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல்: கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை

நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தை குறைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.

இதையடுத்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையம் (எஸ்சிஇஆர்டி) சார்பில்பாடஅளவு குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அறிவிப்பு வெளியாகி ஒரு மாதமாகியும் பாடஅளவு குறைப்பு சார்ந்த விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிடவில்லை. இதனால் மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

என்சிஇஆர்டி பரிந்துரை

கல்வியாண்டு தாமதத்தால், பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்க தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) பரிந்துரை செய்தது. அதையேற்று சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா உட்பட மத்தியவாரியப் பள்ளிகள் கடந்த ஜூலை மாதமே 30 சதவீத அளவுக்கு பாடங்களை குறைத்து, அதன் முழு விவரங்களையும் வெளியிட்டன.

அந்த வழிகாட்டுதலை பின்பற்றி சிபிஎஸ்இ, கே.வி. பள்ளிகள் பாடங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 40 சதவீதம்வரை பாடஅளவு குறைக்கப்படும். அதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை கடந்த செப்டம்பரில் அறிவித்தது. ஆனால், குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்களை இதுவரை அரசு வெளியிடவில்லை.

மாணவர்களுக்கு சிரமம்

இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்தெந்தப் பாடங்களை நடத்துவது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் நிலவிவருகிறது. தனியார் பள்ளிகள் அனைத்து பாடங்களையும் நடத்தி வருகின்றன. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது கல்வித் தொலைக்காட்சி மூலமே பாடங்கள் நடத்தப்படுகின்றன.

அதுவும் அனைத்து தரப்பு மாணவர்களையும் முழுமையாகச் சென்றடையவில்லை. இத்தகைய சிக்கல்கள், கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இதைக்கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். மேலும், பாடக்குறைப்பு விவரங்களையும் உடனே வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நிபுணர் குழு பரிந்துரையின்படி 1 முதல் 10-ம் வகுப்பு வரை 40சதவீதமும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 30 சதவீதமும் பாடங்களைகுறைக்க முடிவானது. என்சிஇஆர்டி வழிகாட்டுதலின்படி பாடத்தின் முக்கிய பகுதிகளில் மாற்றம் செய்யாமல் கூடுதல் விளக்கங்கள் மட்டும் நீக்கப்பட்டன.

அதேநேரம் பள்ளிகள் திறப்பைஅக்டோபர் மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிட்டே பாடத்திட்டக் குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொற்று தணியாததால் பள்ளிகள் திறப்பை முடிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இதனால் பாடஅளவு குறைப்பையும் இறுதிசெய்ய முடியவில்லை. ஏனெனில்,பள்ளிகள் திறப்பை முன்வைத்துதான் எவ்வளவு சதவீதம் பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்று முடிவெடுக்க முடியும்.

தீபாவளிக்குப் பிறகு...

தற்போதைய சூழலில் தீபாவளி முடிந்ததும் நவம்பர் இறுதியில் பள்ளிகளைத் திறந்து மேல்நிலை வகுப்புகளை மட்டும் சுழற்சி முறையில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், பள்ளிகள் திறப்பு, தமிழக அரசின் கொள்கை சார்ந்தவிவகாரம் என்பதால் முதல்வரே இதில் இறுதி முடிவை மேற்கொள்வார். பள்ளிகள் திறப்பு இறுதியானதும் பாடத்திட்டக் குறைப்பு விவரங்களை அமைச்சர் வெளி யிடுவார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x