Published : 27 Oct 2020 07:23 PM
Last Updated : 27 Oct 2020 07:23 PM

10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்: தேர்வுத்துறை அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுகளின் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''செப்டம்பர்/அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாகவே http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

1. பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு- 28.10.2020 (புதன் கிழமை) காலை 11 மணி

2. மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு- 28.10.2020 (புதன் கிழமை) பிற்பகல் 2 மணி

3. மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு- 29.10.2020 (வியாழக்கிழமை) காலை 11 மணி

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

செப்டம்பர்/அக்டோபர் 2020, பத்தாம் வகுப்பு துணைத்தேர்விற்கான மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 03.11.2020 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 04.11.2020 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்திப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

பத்தாம் வகுப்புத் துணைத் தேர்விற்கான மறுகூட்டல் கட்டணம்- பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கு விடைத்தாளின் நகல் கட்டணம்- பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275/-

மறுகூட்டலுக்கான கட்டணம்:

உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ரூ.305/-
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்)- ரூ.205/-

மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்குத் தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாள் நகல் – இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

முக்கிய குறிப்பு:

செப்டம்பர் /அக்டோபர் 2020, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான மறுகூட்டல் / விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்குச் செல்லும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் வேண்டும்''.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x