Published : 27 Oct 2020 02:49 PM
Last Updated : 27 Oct 2020 02:49 PM
நீட் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வுக் குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் முதல்கட்டக் கலந்தாய்வுக்கு அக்.27-ம் தேதி (இன்று) முதல் நவ.2-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.
இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக் குழு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ''இந்தியா முழுவதும் மத்திய அரசின் சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே சென்று தங்களின் மாற்றுத்திறனை ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிச் சான்றிதழைப் பெறுவோர், மருத்துவப் படிப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீட்டைப் (PwD reservation) பெற முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கான உரிமைச் சட்டம் 2016-ன்படி, 21 விதமான மாற்றுத் திறன்களுக்கு, நாடு முழுவதும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு சார்பில் 12 மையங்களில் மாற்றுத்திறனாளிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT