Published : 27 Oct 2020 06:33 AM
Last Updated : 27 Oct 2020 06:33 AM
எந்தத் துறையிலும் சாதனை படைக்க மாணவர்களுக்கு படைப்பாற்றல் மிகவும் அவசியம் என்று வடிவமைப்பு மற்றும் கலைக்கான ஆன்லைன் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற வல்லுநர்கள் அறிவுரை வழங்கினர்.
விஜயதசமியை முன்னிட்டு ஏதேனும் ஒரு கலையைக் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் நோக்கில் ‘டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய‘கிரியேட்டிவ் வித்யாரம்பம்’ எனும் வடிவமைப்பு மற்றும் கலைக்கான ஆன்லைன்பயிற்சிப் பட்டறை நேற்று நடைபெற்றது. இதில், வல்லுநர்கள் பலர் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர்.
குழந்தைகளிடம் ‘கிரியேட்டிவிட்டி’
அசோக் லேலண்ட் வடிவமைப்புத் தலைவர் ஜி.சத்யசீலன் பேசும்போது, “உலக அளவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள பலரும் ஏதாவதுஒரு கலைப்பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 2018-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் பி.ஆலிசன் புற்றுநோய் தொடர்பான மருந்தைக் கண்டுபிடித்தவர். மேலும், அவர் ஆர்மோனிகா எனும்இசைக்கருவியை வாசிப்பதிலும் வல்லவராக விளங்கினார்.
ஒவ்வொரு குழந்தைகளிடம் ‘கிரியேட்டிவிட்டி’ இருக்கிறது. அதைக் கண்டறிந்து அதற்கான பயிற்சிகளை நாம் அளிக்க வேண்டும். ஒருவர் எந்த துறையிலும் சாதனை படைக்க படைப்பாற்றல் மிகவும் அவசியம்” என்றார்.
கலாச்சார பாரம்பரிய ஓவியக் கலைஞர் மார்க் ரத்தினராஜ் பேசும்போது, “இந்தப் பயிற்சியை ஒரு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். இதை இத்தோடு விட்டுவிடாமல் நீங்கள் தொடர வேண்டும். ஆர்ட் அண்ட் டிசைனிங்கில் நீங்கள்அடுத்தடுத்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
எது செய்தாலும் உங்கள் ஐடியாவுக்கு ஏற்ப செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஆர்ட் இருக்கிறது. குழந்தைகளின் மனதிலுள்ள இன்னசன்ஸ்தான் உண்மையான ஆர்ட் ஆகும்” என்றார்.
பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும்
‘டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’ கலை ஆய்வுத் தலைவர் வி.தட்சிணாமூர்த்தி, வண்ணங்களையும் நூலையும் பயன்படுத்தி விதவிதமான பூக்கள் செய்யும் கலையைக் குழந்தைகளுக்கு மிக எளிமையாகப் பயிற்சியளித்தோடு, “குழந்தைகள் கலை மனம் படைத்தவர்கள். அவர்கள் மனது வைத்தால் கலைத் துறையிலும் பல சாதனைகளைப் படைக்க முடியும். அப்படியான குழந்தைகளை, ஊக்கப்படுத்தி, அவர்களது படைப்பாற்றலை பெற்றோர் வளர்க்க வேண்டும்” என்றார்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் 2 முதல் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ‘உங்கள் குழந்தையின் முதல் ஓவியம்’ எனும் தலைப்பிலும், 5 முதல் 8 வயது வரை உள்ளவர்களுக்கு ‘நூல் ஓவியம்’ எனும் தலைப்பிலும், 9 முதல் 13 வயது வரை உள்ளவர்களுக்கு ‘காகிதக் கலை’ எனும் தலைப்பிலும், 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ‘தஞ்சாவூர் பொம்மை (3டி மாடல்)’ எனும் தலைப்பிலும் பயிற்சிகள் வழங் கப்பட்டன.
இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்வை அபினயா ராஜீ தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT