Published : 23 Oct 2020 05:36 PM
Last Updated : 23 Oct 2020 05:36 PM
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுட்காலம் முழுவதும் செல்லும் என்ற உத்தரவைக் கல்வியியல் கல்லூரிகள் அறிவிப்புப் பலகையில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்துவிதப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்தத் தகுதியுடையவர்கள் ஆவர்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை உள்ளது. அந்நிலையை மாற்றித் ஆயுள் முழுவதும் சான்றிதழ் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் இதுகுறித்துத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனைத்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், ''மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது.
எனவே, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளின் முதல்வர்கள், மேற்குறிப்பிட்ட தகவலை பி.எட்., எம்.எட். பயிலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு அறிவிப்புப் பலகை மூலமாகத் தெரியப்படுத்த வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2013-ல் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்கள் இந்த ஆண்டுடன் முடிவடைவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT