Published : 23 Oct 2020 03:12 PM
Last Updated : 23 Oct 2020 03:12 PM
கர்நாடக மாநிலத்தில் நவ.17-ம் தேதி முதல் டிப்ளமோ, டிகிரி, பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அக்.15-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளே இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் வரும் நவம்பர் 17-ம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கர்நாடகத் துணை முதல்வரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான அஷ்வத் நாராயண் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கல்லூரிகளை நவம்பர் 17-ம் தேதி முதல் மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொறியியல், டிப்ளமோ மற்றும் டிகிரி கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர்கள் நேரடியாகக் கல்லூரிக்கு வரலாம். அல்லது ஆன்லைன் மூலமாகவே கற்றலில் ஈடுபடலாம். தேவைப்பட்டால் ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் பாடம் கற்கலாம்.
கல்லூரிக்கு மாணவர்கள் வருவதற்கு முன், தங்களின் பெற்றோரிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். மாணவர்களுக்குத் தேவையான கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT