Published : 23 Oct 2020 06:37 AM
Last Updated : 23 Oct 2020 06:37 AM
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.
நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதமான 547 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 15 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படுகிறது.
இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியபல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2020-21 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் நடத்த உள்ளது.
முதல்கட்ட கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ, மாணவிகள் இணையதளத்தில், வரும் 27-ம் தேதி முதல் நவ. 2-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.
தாங்கள் தேர்வு செய்த கல்லூரியைவரும் 28-ம் தேதி முதல் நவ. 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யும் பணி நவ. 3, 4-ம் தேதிகளில் நடைபெறும். இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் நவ. 5-ம் தேதி வெளியிடப்படும்.
கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் நவ. 6-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு நவ. 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு டிச. 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT