Last Updated : 17 Oct, 2020 12:51 PM

 

Published : 17 Oct 2020 12:51 PM
Last Updated : 17 Oct 2020 12:51 PM

பொறியியல் படிக்கும் மாணவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏஐசிடிஇ உதவித்தொகை அறிவிப்பு

பொறியியல் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகமான ஏஐசிடிஇ உதவித்தொகை வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இளம் பெண்களுக்குத் தொழில்நுட்ப அறிவையும் திறன்களையும் தன்னம்பிக்கையும் அளிப்பதன் வழியாக அவர்களை அதிகாரப்படுத்தலாம். இந்த நோக்கத்தில் பிரகதி உதவித்தொகைத் திட்டத்தை அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. பி.இ., பி.டெக்., உள்ளிட்ட தொழில்துறைப் படிப்புகளை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளுக்கான பிரகதி உதவித் தொகைத் திட்டம் 2020-21 அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பொறியியல் பட்டப் படிப்புகளை மேற்கொண்டுவரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தடைகளை மீறிச் சாதிக்க சாக்‌ஷம் உதவித்தொகை 2020-21 திட்டத்தை அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது.

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவிகளும் டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் பிரகதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதே வகைப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் சாக்‌ஷம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே இந்த உதவித்தொகைகளைப் பெற்று வருபவர்கள் புதுப்பிக்க மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்களைப் பொறுத்தே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களுக்குக்கூட பிரகதி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இரண்டு உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு தலா ரூ.50 ஆயிரம் வரை தேர்வான மாணவர்களுக்கு வழங்கப்படும். ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

அவசியமான ஆவணங்கள்:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்

மாணவரின் வங்கிக் கணக்கு விவரம்

மாணவரின் ஆதார் எண் அல்லது பள்ளி/ கல்லூரியின் சான்றிதழ்

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 அக்டோபர் 2020

விண்ணப்பிக்க: https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x